அரசியலில் தவறு செய்தவர்கள் நிலைக்க மாட்டார்கள் -சி.டி. ரவி எம்.எல்.ஏ
அரசியலில் தவறு செய்தவர்கள் நிலைக்க மாட்டார்கள் என சி.டி. ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
சிக்கமகளூரு:
பூமி பூஜைகள்
சிக்கமகளூரு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜைகள் செய்தார். பின்னர் அவர் சிக்கமகளூருவில் உள்ள ஹிரேகவுஜா கிராமத்தில் உள்ள தடுப்பணைக்கு பூஜைகள் செய்தார்.
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிக்கமகளூரு தொகுதியில் பல்வேறு அரசு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயனடையும் வகையில் நலத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்திஹள்ளி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், ரூ.5 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நமது தொகுதியில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பணிகள் நிறைவடையும்.
நான் தவறாக பேசவில்லை
காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மாநிலத்தில் தனக்குத்தானே புகழாரம் சூட்டி கொள்கிறார். அவரை நான் தவறாக பேசவில்லை. உப்பு தின்றவன் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கவேண்டும். தற்போது தப்பு செய்தவர்கள் மட்டும் ஆதங்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தப்பு செய்யாதவர்கள் ஆதங்க பட தேவையில்லை. அரசியலில் தப்பு செய்தவர்கள் கண்டிப்பாக நிலைத்து நிற்க மாட்டார்கள். தப்பு செய்துவிட்டு சிறைக்கு சென்றவர்கள் கண்டிப்பாக அந்த பலனை அனுபவித்தே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.