வரட்டுப்பாறை எஸ்டேட்டில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை
வரட்டுப்பாறை எஸ்டேட்டில் மர்மமாக சிறுத்தை இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வால்பாறை
வரட்டுப்பாறை எஸ்டேட்டில் மர்மமாக சிறுத்தை இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்து கிடந்த சிறுத்தை
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் உஷ்மான். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். டீக்கடையின் பின்னால் கோழிக்கூடு வைத்து கோழியும் வளர்த்து வருகிறார். கோழிகளை கூண்டிலிருந்து திறந்து விடுவதற்காக டீக்கடையின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது கோழிக்கூட்டில் நகங்கள் சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை பார்த்தார். இதையடுத்து அவர் இது குறித்து வரட்டுப்பாறை எஸ்டேட் நிர்வாகத்திற்கும், வால்பாறை வனச்சரக அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை
அதன்பேரில் வனச்சரகர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மனித- வனவிலங்குகள் மோதல் தடுப்பு வேட்டை தடுப்பு காவலர்களுடன் சம்பவயிடத்திற்கு வந்த வனவர்கள் மணிகண்டன், மாரிமுத்து ஆகியோர் உரிய விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராமசுப்ரமணியம், துணை கள இயக்குனர் கணேசன் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களின் உத்தரவின் பேரில் சிறுத்தைப்புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்துறையின் மனித வனவிலங்குகள் மோதல் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தொழிலாளர்கள் அச்சம்
இறந்த ஆண் சிறுத்தைக்கு 4 வயது இருக்கலாம் என்றும் கோழிக்கூட்டில் காலின் நகம் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் சிறுத்தைப்புலி இறந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து பிரேத பரிசோதனை செய்த பின்னர் தான் தெரியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை இறந்து கிடந்த இடம் அதிகளவில் தேயிலை காபி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ள பகுதியாகவும், வால்பாறை சோலையாறு அணை செல்லும் சாலையாகவும் இருப்பதால் இந்த இடத்தில் சிறுத்தைப்புலி மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வால்பாறை வனத்துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.