பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும்
ரேஷன் கடைகளில் பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும் என மாவட்ட வழங்கல் அலுவலர் அறிவுறுத்தினார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் கலவை வட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டம் ஆற்காட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆற்காடு சந்தியா, கலவை சத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை கலந்துகொண்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் தரமானதாக வழங்கப்படுகிறது. இதனை நம்பி உள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்துகின்றனர். அரிசியில் கருப்பு அரிசி அதிகமாக இருந்தால் அதனை வழங்கக்கூடாது. குறித்த நேரத்தில் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆற்காடு மற்றும் கலவை தாலுகாவில் உள்ள கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.