சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடி- 15 பேர் மீது வழக்கு
புனே தனியார் ஆஸ்பத்திரியில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நடந்த மோசடி தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனே,
புனே தனியார் ஆஸ்பத்திரியில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நடந்த மோசடி தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரகம் தானம்
புனேயில் ரூபி ஹால் கிளினிக் என்ற தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் இந்த ஆஸ்பத்திரியில் கோலாப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் அவரது சிறுநீரகத்தை இளம்பெண் ஒருவருக்கு தானமாக வழங்கினார்.
இதேபோல இளம்பெண்ணின் தாய், அவரது மகளுக்கு சிறுநீரகம் வழங்கிய பெண்ணின் கணவருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கி இருந்தார்.
மோசடி வழக்குப்பதிவு
இதற்கிடையே, கோலாப்பூரை சேர்ந்த பெண் ரூ.15 லட்சத்திற்காக அவரது சிறுநீரகத்தை கொடுத்தது தெரியவந்தது. மேலும் பெண் யாருக்காக சிறுநீரகத்தை தானமாக கொடுத்தாரோ, அந்த நபர் அவரது கணவர் இல்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை கோரேகாவ் பார்க் போலீசில் புகார் அளித்தது.
புகார் தொடர்பாக போலீசார் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாக அறங்காவலர் பர்வீஸ் கிரான்ட், ஊழியர்கள் மற்றும் மனைவி என பொய் கூறி பணத்திற்காக சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெண், சிறுநீரகத்தை தானமாக பெற்ற நபர் உள்ளிட்ட 15 பேர் மீது மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-----