நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

இட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரக்கோணம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-05-12 15:19 GMT
அரக்கோணம்

அரக்கோணம் நகராட்சியில் பழனிபேட்டை, பஜார் பகுதி மற்றும் சுவால்பேட்டை என 3 கோட்டத்தில் சுமார் 190 நிரந்தர தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைத்து பழனிபேட்டை கோட்டத்தில் மட்டுமே வேலை செய்யும்படி இடமாறுதல் செய்து ஆணையர் லதா உத்தரவிட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து நிரந்தர தூய்மைப் பணியாளர்களும் நேற்று காலை சுவால்பேட்டை அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் ஏ.பி.எம். சீனிவாசன் தொழிலாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்காமலும், தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முன் அறிவிப்பின்றி பணியிட மாற்றம் செய்யக்கூடாது என கோஷமிட்டார். 

தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி துணைத் தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நகராட்சி ஆணையரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்