நெல்லையில் கடைகளை அடைத்து வியாபாரிகள் திடீர் போராட்டம்
நெல்லையில் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் ரதவீதிகளில் நடைபாதை வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கும், நிரந்தர கடைகள் நடத்தி வரும் உரிமையாளர்களுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. தங்களது கடைகள் முன்பு ஆக்கிரமித்து நடைபாதை கடைகள் அமைத்து உள்ளதாகவும், அதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நேற்று காலை கீழரதவீதியில் உள்ள ஒரு பாத்திரக்கடை முன்பு ஒருவர் நடைபாதை கடையை திறக்க முயன்றார். அப்போது பாத்திரக்கடை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு தள்ளுவண்டி கடையை அகற்ற முயன்றபோது தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.
இதையடுத்து டவுன் கிழக்கு, வடக்கு ரதவீதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளை வியாபாரிகள் அடைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையப்பர் கோவில் நுழைவு வாசல் அருகில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த டவுன் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நடைபாதை வியாபாரிகள் கிழக்கு மற்றும் வடக்கு ரதவீதிகளில் நிரந்தரமாக வைத்திருக்கும் தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, நடைபாதை வியாபாரிகள் சங்க தலைவர் மாரியப்பன், சம்பந்தப்பட்ட நடைபாதை கடைக்காரர் நம்பிகுமார் ஆகியோர் தலைமையில் நடைபாதை வியாபாரிகளும் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடைபாதை வியாபாரிகள் அமைத்திருக்கும் கடைகளை அகற்றக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர். ஒரே பகுதியில் இருதரப்பினரும் போட்டி போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நெல்லை மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் அங்கு வந்து இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, ஐகோர்ட்டு உத்தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து வியாபாரிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.