விரிவாக்க பணியின்போது வேரோடு சாய்ந்த மரம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணியின்போது மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-05-12 14:45 GMT
குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணியின்போது மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விரிவாக்க பணி

ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு சாலை செல்கிறது. இங்கு 14 கொண்டை ஊசி வளைவுகளும், பல்வேறு குறுகிய வளைவுகளும் காணப்படுகின்றன. மலைப்பாதை என்பதால் ஆங்காங்கே குறுகலாக உள்ளது. 

இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.

மரம் விழுந்தது

இதற்கிடையில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால், அந்த சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. எனினும் அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 

இந்த நிலையில் இன்று குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி டபுள்ரோடு அருகே விரிவாக்க பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது சாலையோரத்தில் மண்ணை தோண்டியபோது, நூற்றாண்டு பழமை வாய்ந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த சமயத்தில் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வராததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

போக்குவரத்து பாதிப்பு

எனினும் சாலையின் குறுக்கே மரம் விழுந்து கிடந்ததால், அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மரம், ஓரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த பணி சுமார் 1 மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்