3 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்
பந்தலூர் கூட்டுறவு தொழிற்சாலையில் 3 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று சிறு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பந்தலூர்
பந்தலூர் கூட்டுறவு தொழிற்சாலையில் 3 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று சிறு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கூட்டுறவு தொழிற்சாலை
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கூட்டுறவு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பந்தலூர், தேவாலா அட்டி, உப்பட்டி, நெல்லியாளம், பொன்னானி, கொளப்பள்ளி, மழவன்சேரம்பாடி, அய்யன்கொல்லி, தட்டாம்பாறை, கருத்தாடு, எடத்தால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது தோட்டத்தில் விளையும் பச்சை தேயிைலயை பறித்து தொழிற்சாலைக்கு வழங்கி வருகின்றனர். இதற்கான தொகை, மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
3 மாத நிலுவை
ஆனால் கடந்த 3 மாதங்களாக கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க பணம் இல்லாமல் சிறு தேயிலை விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கவலை அடைந்து இருக்கின்றனர்.
மேலும் தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையை போக்க நிலுவை தொகை உடனடியாக கிடைக்க அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறு தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து சிறு தேயிலை விவசாயிகள் கூறியதாவது:-
மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ததும், அந்த தொகை எங்களுக்கு உடனே வழங்கப்படும். ஆனால் கடந்த 3 மாதங்களாக கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு தொகை வழங்கப்படவில்லை. இதனால் கடும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.