ஆர்.டி.ஓ. புரோக்கர் கடத்தி படுகொலை; ஆட்டோ டிரைவர் உள்பட 7 பேர் போலீசில் சரண்
பெங்களூருவில், முன்விரோதத்தில் ஆர்.டி.ஓ. புரோக்கரை கடத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 7 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
பெங்களூரு:
ஆர்.டி.ஒ. புரோக்கர் கொலை
பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லட்சுமிபுரா பகுதியில் வசித்து வந்தவர் அமுல் என்கிற சுகாஸ் (வயது 20). இவர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.) புரோக்கராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அமுல் அதன்பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அமுல் மாயமானதாக அவரது தந்தை பொம்மனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் அமுலை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே பசவபுரா கேட் பகுதியில் அமுல் இறந்து கிடந்தார். அவரை யாரோ கொலை செய்து உடலை வீசியது தெரியவந்தது. இது குறித்து
எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
7 பேர் போலீசில் சரண்
இந்த நிலையில் அமுலை கொலை செய்ததாக ஆட்டோ டிரைவரான காந்தா உள்பட 7 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது கடந்த யுகாதி பண்டிகை அன்று அமுல் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது காந்தாவின் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமுலுக்கும், காந்தாவுக்கும் இடையே பிரச்சினை உண்டானது. அப்போது அமுலை, காந்தா உள்ளிட்ட சிலர் தாக்கியதாக தெரிகிறது. இந்த பிரச்சினை பொம்மனஹள்ளி போலீஸ் நிலையம் வரை சென்று உள்ளது. அப்போது காந்தா, அமுலை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம்
ஆனாலும் அமுலுக்கும், காந்தாவுக்கும் முன்விரோதம் இருந்து உள்ளது. இதனால் அமுல் மீது கோபத்தில் இருந்து வந்த காந்தா, அமுலை கொலை செய்ய முடிவு செய்து உள்ளார். அதன்படி கடந்த 9-ந் தேதி அமுலை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திய காந்தா அவரை காருக்குள் வைத்தே கொலை செய்து உடலை பசவபுரா கேட் பகுதியில் வீசி சென்றது தெரியவந்து உள்ளது.
அமுலை கொலை செய்த பின்னர் காந்தா உள்பட 7 பேரும் திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து கொண்டு உள்ளனர். பின்னர் 7 பேரும் பெங்களூரு திரும்பி போலீசில் சரண் அடைந்தது தெரியவந்து உள்ளது. கைதான 7 பேர் மீதும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.