தூத்துக்குடியில் மளிகைக் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
தூத்துக்குடியில் மளிகைக்கடைகாரரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 56). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெபராஜிடம் தூத்துக்குடி புஷ்பாநகரை சேர்ந்த மெய்கண்டன் (25) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு 3 கிராம் தங்க கடுக்கண் கொடுத்ததாகவும், அதனை திருப்பி தருமாறும் கூறி ஜெபராஜின் செல்போனில், அடிக்கடி பேசி தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதனை ரவிக்குமார் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மெய்க்கண்டன், அரிவாளால் ரவிக்குமாரை வெட்டி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மெய்க்கண்டனை கைது செய்தனர்.