சீருடையில் வந்து மனு கொடுத்த ராணுவ சகோதரர்கள்
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு சீருடையில் வந்து ராணுவ சகோதரர்கள் மனு கொடுத்தனர்.
தேனி:
தேனி அருகே உள்ள குண்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது தம்பி சிவக்குமாருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர்கள் இருவரும் ராணுவ சீருடையில் வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம் செல்வராஜ் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், "நான் ஜம்மு காஷ்மீரிலும், எனது தம்பி சிவக்குமார் அருணாச்சல பிரதேசத்திலும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு ஊரில் நிலப்பிரச்சினை உள்ளது. ஆனால், கிராம நிர்வாக அலுவலர் எங்களுக்கு எதிர் தரப்பினருடன் சேர்ந்து கொண்டு எங்களின் கோரிக்கைகளுக்கு தாமதம் செய்து வருகிறார்.
எனவே, எங்கள் நிலத்துக்கு தீர்வு காணும் வரை அந்த நிலத்துக்கு யாருக்கும் பட்டா கொடுக்கக்கூடாது. மேலும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது ராணுவ பணியை மன உளைச்சல் இல்லாமல் தொடர உதவி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.