கடன் ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
கடன் ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்
கடன் ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணைய குற்றங்கள் அதிகரிப்பு
மனித நாகரீக வளர்ச்சியில் குற்றங்களின் வளர்ச்சியும் பரிணாமம் அடைந்துள்ளது. கையில் பணம் இருந்தால் பாதுகாப்பு இல்லை என வங்கியில் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது வங்கிக்கணக்கில் உள்ள காசு பாதுகாப்பாக இருக்குமா? என்று மக்கள் யோசிக்கும் அளவுக்கு இணைய குற்றங்கள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் யுகத்தில் கத்தியை காட்டாமல் பணத்தை அபகரிக்கும் மர்மநபர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களை பிடிப்பதும் காவல்துறைக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இணையகுற்றங்களால் ஏராளமாக மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அவர்கள் இழந்த பணத்தை மீட்க வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேவேளையில் பணத்தை பறிகொடுக்காமல் தடுப்பதற்கான விழிப்புணர்வும் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது புதிதாக உருவெடுத்துள்ள இணையதள மோசடி குற்றங்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
கடன் ஆப்கள்
வங்கியில் இருந்து பேசுவதாக மர்மநபர் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி விவரங்களை பெற்று வங்கியில் உள்ள பணத்தை அபகரித்து வருகின்றனர். இதுகுறித்து மக்களுக்கு ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டதால் தற்போது புதுப்புது வடிவங்களில் கணினி மென்பொருள் தெரிந்த மர்மநபர்கள் மக்களின் பணத்தை நொடியில் பறித்து விடுகின்றனர். இவர்களிடம் இருந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
தற்போது உடனடியாக கடன் வழங்கப்படும் என்ற ஆப்கள் (செயலி) பலவகை வந்துள்ளது. இதில் பெரும்பாலான ஆப்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆவணங்கள் இன்றி கடன் தருவதாக குறுந்தகவல் செல்போனுக்கு அனுப்புகிறார்கள். அதனுடன் ஒரு இணைய தள ஆப் லிங்கையும் அனுப்பி வைப்பார்கள். அதை நம்பி நீங்கள் லிங்கில் சென்று செல்போனில் ஆப்பினை பதிவிறக்கம் செய்தால் உடனே உங்களது செல்போனில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் பார்த்து அதை திருடி வைத்துக் கொள்வார்கள். அவர்கள் வழங்கும் கடன் தொகையினை நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்வார்கள்.
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
நீங்கள் செலுத்த தவறினால் உங்களது செல்போனில் உள்ள எண்களுக்கு உங்களை பற்றி தவறான குறுந்தகவல் அனுப்புவார்கள். உங்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவார்கள். பெற்ற கடனுக்கு பல மடங்கு வட்டியும் சேர்த்து அதிக தொகை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். எனவே இதுபோன்ற கடன் ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
மேலும், பகுதி நேர வேலை பார்த்து அதிகம் சம்பாதிக்கலாம் என்று வரும் குறுந்தகவலையும் நம்பி ஏமாற வேண்டாம். அதை நம்பி செல்போனில் அவர்கள் அனுப்பும் ஆப்களை பதிவிறக்கம் செய்தால் தங்களது விவரங்கள் திருடப்படும். பின்னர் உங்களை மிரட்டி பணம் பறிப்பார்கள். இதுபோன்ற நம்பகத்தன்மை இல்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது.
ஆன்லைனில் பல்வேறு நிறுவனங்களில் வாடிக்கையாளர் மைய எண்கள் போலியானதாகவே உள்ளது. எனவே ஆன்லைனில் வரும் நம்பகத்தன்மையற்ற வாடிக்கையாளர் மைய எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.