மாமியார்-மருமகள் உள்பட 4 பேர் கைது
தேனி அருகே சில்லறை விற்பனைக்காக கஞ்சாவை பொட்டலம் போட்டுக் கொண்டிருந்த போது மாமியார், மருமகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி:
கஞ்சா பொட்டலம்
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தலை தடுக்கவும், கண்காணிக்கவும் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினருக்கு, தேனி அருகே பூதிப்புரத்தில் சிலர் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சில்லறையில் விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டுக் கொண்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது, பூதிப்புரம் ரெயில்வே பாலம் அருகில் உள்ள ஒரு ஓடையில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கஞ்சாவை பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்தனர்.
4 பேர் கைது
போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் மனைவி செல்வராணி (வயது 55), அவருடைய மருமகள் முத்துலட்சுமி (35), அதே ஊரில் உள்ள ராமக்காரன் தெருவை சேர்ந்த தங்கப்பாண்டி (27), மஞ்சிநாயக்கன்பட்டி முத்துநகரை சேர்ந்த முருகன் (52) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள், கஞ்சா விற்பனை செய்த தொகை ரூ.36 ஆயிரத்து 500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். செல்வராணி உள்பட 4 பேரையும், பறிமுதல் செய்த பொருட்களையும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
ஒரே குடும்பம்
கைது செய்யப்பட்ட செல்வராணியின் மகன்கள் ராஜபிரபு, அருண், மற்றொரு மருமகள் பிரியா ஆகிய 3 பேர் கடந்த வாரம் கஞ்சா வழக்கில் பழனிசெட்டிபட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா விற்பதை குடும்ப தொழிலாக செய்து வந்த நிலையில், ஒரே குடும்பத்தில் இதுவரை 5 பேர் கைதாகி உள்ளனர்.