கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் செண்பகப்பேரி கிளை செயலாளர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி தாலுகா செயலாளர் பாபு, நகர செயலாளர் சரோஜா, மாவட்ட துணைச் செயலாளர் சேது ராமலிங்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பரமராஜ், உதவி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் லெனின்குமார், நகர குழு உறுப்பினர் வக்கீல் பாரதிகண்ணம்மா உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் சங்கரன்நாராயணனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
செண்பகப்பேரி கிராமத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ஆபத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் கியாஸ் நிரப்பும் குடோன் கட்டப்பட்டு வருகிறது. கிராமசபை கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே கியாஸ் குடோன் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். செண்பகப்பேரி கிராமத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.