அவினாசிலிங்கேசுவரர் கோவில் தேரோட்டம்

அவினாசிலிங்கேசுவரர் கோவில் தேரோட்டம்;

Update: 2022-05-12 10:41 GMT
வினாசியில்  சிவசிவ பக்தி கோஷத்துடன் அவினாசிலிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அவினாசி லிங்கேசுவரர் கோவில் 
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான், கருணாம்பிகை அம்மாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த திருத்தலம் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகும். மேலும் காசிக்கு நிகரான புகழுடன் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். அதன்படி  இந்த ஆண்டு சித்திரை மாத தேரோட்ட திருவிழா  கடந்த 5ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன்  தொடங்கியது. அதை தொடர்ந்து 6ந் தேதி சூரியசந்திர மண்டல காட்சிகள், 7ந் தேதி கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகள், 8ந் தேதி புஸ்பவிமானங்களில் சுவாமி திருவீதி உலா வந்தார். 
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
பின்னர் 9ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. 10ந் தேதி கற்பகவிருட்சம், திருக்கல்யாண உற்சவமும், உற்சவமூர்த்திக்கும் கருணாம்பிகை அம்மனுக்கும் ஊஞ்சல் விழா நடந்தது. கோவில் அர்ச்சகர் திருமாங்கல்யபூஜை செய்து கல்யாண உற்சவம் நடத்தி வைத்தார். அப்போது பெங்களூரு வேத ஆகம பாடசாலை முதல்வர் சந்திரமூர்த்தி சிவம் தலைமையில் மாணவர்கள் வேத மந்திரம் மற்றும் திருமுறை பாடினர். இதைத்தொடர்ந்து யானை வாகனத்தில சுவாமி திருவீதி உலா நடந்தது.
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது.விநாயகப்பெருமான், அவினாசியப்பர், கரிவரதராஜப்பெருமாள் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு விஷேச அபிஷேக ஆராதனை நடந்தது. அன்று
காலை 6.30 மணியளவில் சிறப்புநாதஸ்வரம் இசைக்க உற்சவமூர்த்திகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரிய தேரில் எழுந்தருளினார். அப்போது பஞ்சவாத்தியங்கள் ஒலிக்க சுவாமிகள் ரதத்தின் மீது அமர்த்தப்பட்டார். இதனை தொடர்ந்து பெரிய தேரில் வீற்றிருக்கும் சோமஸ்கந்தர் உமாமகேள்வரி, சிறிய தேரில் வீற்றிருக்கும் ீகருணாம்பிகை அம்மனை பக்தர்கள் ரதத்தின் மீது சென்று தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
திருவிழாவின் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. அதன்படி நேற்று காலை 8.30 மணியளவில் ரதத்தின் மீது வீற்றிருந்த உற்சவமூர்த்தி களுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆன்மிக சான்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் சிவசிவ கோஷத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர். அழகுன்னா அழகு அவினாசி தேரழகு என்பதற்கு ஏற்றவாரு தேர் அசைந்தாடி நகர்ந்தது. பின்னர் அவினாசி மேற்கு ரதவீதி குலாலர் மண்டபம் அருகே நிறுத்தப்பட்டது. மீண்டும் நாளை காலை 8 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்