திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
திருவள்ளூர்,
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஆணையரின் ஆணையின் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் மீது தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை வடக்கு சரக இணை ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் மோகன் திருவள்ளூர் பகுதிகளில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கை செய்தனர்.
இதில் சுமார் 75 வாகனங்கள் தணிக்கை செய்ததில் 16 வாகனங்களுக்கு ஏர் ஹாரன் பொருத்தப்பட்டது கண்டறிந்து அதற்கான கட்டணமாக ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 100 நிர்ணயம் செய்து வெளிமாநில வாகனம் ஒன்றுக்கு மட்டும் ரூ. 10 ஆயிரம் உடனடி வசூல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்:-
அதிக ஒலியெழுப்பும் காற்று ஒலிப்பான்கள் 80 டெசிபலுக்கு மேல் உள்ள வாகனங்களின் மூலம் ஒலி மாசு ஏற்படும்போது பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் நடந்து செல்லக்கூடியவர்கள், இருசக்கர ஓட்டிகள் திடீரென சத்தம் வரும்போது நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். இதனை தடுப்பதற்காக இதுபோன்ற தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இனி வரும் காலங்களில் இவ்வாறு காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்களை தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.