சென்னையில் 2-வது நாளாக மழை பெய்தது - மெரினாவில் கடல் சீற்றம்

சென்னையில் 2-வது நாளாக மழை பெய்தது. இதனால் சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு உள்பட கடற்கரைப் பகுதிகளில் கடல் அலை சற்று சீற்றத்துடனேயே இருந்தது.

Update: 2022-05-12 05:41 GMT
சென்னை,  

வங்கக்கடலில் அசானி புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தரமணி, எம்.ஜி.ஆர். நகர், நுங்கம்பாக்கம், ஒய்.எம்.சி.ஏ. நந்தனம், விமானநிலையத்தில் தலா 2 செ.மீ. மழையும், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், ஆலந்தூரில் தலா ஒரு செ.மீ. மழையும் பதிவானது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று காலையில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகக் கூட்டங்களுடன் ரம்மியமான சூழல் நிலவியது.

இதையடுத்து பிற்பகலில் சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் சென்னையில் நேற்று வெப்பம் தணிந்து காணப்பட்டது. சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு உள்பட கடற்கரைப் பகுதிகளில் கடல் அலை நேற்றும் சற்று சீற்றத்துடனேயே இருந்தது.

சென்னையில் இன்றும் (வியாழக்கிழமை) சில இடங்களில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்