தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய 16 வயது சிறுமியின் அனுமதி மறுப்பு- ஐகோர்ட்டில் மாநில அரசு மனு
தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய 16 வயது சிறுமியை அனுமதிக்க முடியாது என ஐகோர்ட்டில் மராட்டிய அரசு கூறியுள்ளது.;
மும்பை,
தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய 16 வயது சிறுமியை அனுமதிக்க முடியாது என ஐகோர்ட்டில் மராட்டிய அரசு கூறியுள்ளது.
மனு தாக்கல்
மும்பை ஐகோர்ட்டில் சமீபத்தில், 16 வயது சிறுமி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர், “எனது தந்தையின் கல்லீரல் செயலிழந்துவிட்டது என்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவரின் உயிரை காப்பாற்ற மார்ச் மாதம் கல்லீரல் மாற்று அறுவை கிசிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அவருக்கு மருத்துவ ரீதியாக கல்லீரலின் ஒரு பகுதியை வழங்கும் தகுதி எனக்கு மட்டுமே இருக்கிறது. எனவே எனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய முன் வந்துள்ளேன்.
நான் மைனர் என்பதால், உறுப்பு மாற்று சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கமிட்டி ஒப்புதல் வழங்கினால் மட்டுமே இதை செய்ய முடியும். இதற்காக விண்ணப்பித்து உள்ளேன். கமிட்டியை விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்’’.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு தெரிவித்தது.
அனுமதி மறுப்பு
இந்நிலையில் மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி, 16 வயது சிறுமியின் கல்லீரலை தானமாக வழங்க அனுமதி மறுத்துள்ளது.
இதுகுறித்து கமிட்டி அளித்த பதிலில், “கல்லீரல் தானமளிக்கும் சிறுமி, உணர்ச்சி அழுத்தத்தில் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
எனவே அவர் சுதந்திரமாக இந்த முடிவை எடுத்தார் என கூற முடியாது. பெண்ணின் தந்தை நீண்டநாள் குடிகாரர். இதுவே அவரின் கல்லீரல் பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம். அவர் குடியில் இருந்து விடுபட்டதற்கான எந்த ஆவண ஆதாரமும் இல்லை. உறுப்பு தானம் செய்யும் சிறுமிக்கும், அவரது தயாருக்கும் அறுவை கிகிச்சையின் ஆபத்துகள் மற்றும் சிக்கல் பற்றி எந்த புரிதலும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கமிட்டியின் அறிக்கையை எதிர்த்து சிறுமி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதன் மீதான விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என தெரிகிறது.
-----