டெங்கு கள பணியாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
4 மாதமாக சம்பளம் வழங்காததால் ஆரணியில் டெங்கு பணியாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி
4 மாதமாக சம்பளம் வழங்காததால் ஆரணியில் டெங்கு பணியாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெஙகு பணியாளர்கள்
ஆரணி நகரில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி சார்பில் டெங்கு மஸ்தூர் கள பணியாளர்களாக 35 பேரும், 5 இடங்களில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணியில் 25 தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருமே தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாக பணி அமர்த்தப்பட்டவர்கள் ஆவர்.
இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.265 வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 4 மாதகாலமாக இரு பிரிவு தொழிலாளர்களுக்கும் ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஒட்டுமொத்தமாக பணியாளர்கள் அனைவரும் ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் பல ஆண்டு காலமாக நகராட்சி மூலமாகவே தனியார் ஒப்பந்ததாரர் மூலம் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு அரசு பிடித்தம் செய்து வைப்பு நிதியில் வைக்க உத்தரவு பிறப்பித்தும் அவற்றினை பிடித்தம் செய்வதோடு சரி கணக்கில் வைப்பதில்லை.
மேலும் 4 மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் தற்போது 15 பேருக்கு மேல் வேலைக்கு வேண்டாம் என கூறப்பட்டதாகவும் இதனால் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்’’ என்றார். தகவல் அறிந்ததும் ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, மற்றும் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எங்களிடம் கேட்க முடியாது
அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘‘உங்களது சம்பளத்தை தனியார் ஒப்பந்ததாரர் தான் வழங்க வேண்டும். அவர் வழங்கவில்லை என்றால் எங்களிடம் கேட்க முடியாது. இது போல் போராட்டம் நடத்தக்கூடாது. உங்களுக்கு விரைவில் சம்பளம் வழங்க ஒப்பந்ததாரர் மூலம் நடவடிக்கை எடுக்கிறோம்.
தற்போது கோடைகாலம் என்பதால் டெங்கு பணிக்கு அதிக நபர்கள் தேவையில்லை. அதனால் 15 பேருக்கு மேல் வேண்டாம்’’ என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் ஒட்டுமொத்தமாகவே நிற்கிறோம். எங்களுக்கு அடுத்த மாதம் வேலை கொடுங்கள் என்றனர். அதற்கு ஆணையாளர் நீங்கள் நின்று விடுங்கள் நாங்கள் அடுத்த மாதம் உங்களை அழைக்கிறோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.