தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
திருச்சி திருவானைக்காவல் நெல்சன் சாலை, சக்தி நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதினால் அவர்கள் பயத்தில் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் கடிக்க வருவதால் அவர்கள் வெளியே செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சக்திநகர், திருச்சி.
மூடி இல்லாத வால்வு தொட்டி
திருச்சி மாவட்டம், குடமுருட்டி ரெயில்வே கேட்டிற்கு அருகில் கோணக்கரை சாலையோரத்தில் தண்ணீர் குழாய் வால்வு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை மூடியிருந்த சிமெண்டு சிலாப்புகள் அனைத்தும் சிதிலமடைந்து தொட்டியின் உள்ளேயே விழுந்துள்ளன. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குடமுருட்டி, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் இருந்து மத்திய பஸ் நிலையம் செல்லும் சாலையின் நடுவே ஆங்காங்கே மண் குவியல் போல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மோகன்ராஜ், திருச்சி.
எரியாத மின் விளக்குகள்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து பாலக்கரை செல்லும் சாலையின் ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரியாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பாலக்கரை, திருச்சி.