அரசின் திட்டங்கள் முழுவதையும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
அரசின் திட்டங்கள் முழுவதையும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விராட்டிக்குப்பத்தில் வேளாண்மைத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் 96 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதன் நோக்கம் விவசாயிகள், வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் இருப்பிடங்களிலேயே பெற்று வேளாண் பணிகளை மேற்கொண்டு 100 சதவீதம் பயன்பெற வேண்டும் என்பதே ஆகும்.
வேளாண் கருவிகள்
அதனடிப்படையில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், வேளாண் கருவிகள், உரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை மானியத்துடன் கூடிய திட்டத்தில் வழங்குதல், தோட்டக்கலைத்துறைமூலம் பல்வேறு வகையான மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசன கருவிகள்,
பண்ணை குட்டை அமைத்தல் போன்றவை மானிய திட்டத்துடன் வழங்குதல், வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண் கருவிகள் மானியத்துடன் வழங்குதல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பயிர்கடன்
மேலும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் விவசாயிகளுக்கு பயன்பாடற்ற விளைநிலங்களை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் சீர்செய்தல், வாய்க்கால் மற்றும் வரப்பு அமைத்துக்கொடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்வதற்கு விண்ணப்பங்கள் பெறுதல்,
வருவாய்த்துறை மூலம் விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, குறு, சிறு விவசாய சான்று தேவையானவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொளுதல், வண்டல் மண் எடுத்துச்செல்வதற்கான ஆணைகள் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படுகிறது.
எனவே இதற்கும் இம்முகாமில் விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளலாம். கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் பணி மேற்கொள்ளும் கால கட்டத்தில் இருந்தே பயிர் கடன்களும் வழங்கப்படுகிறது.
இவ்வாறான அரசின் திட்டங்கள் முழுவதையும் விவசாயிகள் தங்கள் வசிப்பிடங்களிலேயே இருந்து பெற்று வேளாண் பணிகளை மேற்கொண்டு 100 சதவீதம் பயன்பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் வேளாண்மை இணை இயக்குனர் ரமணன், துணை இயக்குனர் பெரியசாமி, உதவி இயக்குனர்கள் வேல், பாலமுருகன், விராட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.