திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை

திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை

Update: 2022-05-10 17:19 GMT
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை கொட்டித்தீர்த்தது. அக்னி நட்சத்திரத்தின் உக்கிரத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று கவலையில் இருந்த மக்களுக்கு, கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் மாநகரில் பரவலாக மழை பெய்து வருவது மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நேற்று பெய்த மழையால் திருப்பூர் ஓம்சக்தி கோவில் ரோட்டில் அதிகளவில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிகால் வசதி சரிவர இல்லாததால் அந்த பகுதியில் அடிக்கடி மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.
இதுபோல் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு ரெயில்வே ஒற்றைக்கண் பாலத்தின் அடியிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது. அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. மழை பெய்தாலே இந்த ஒற்றைக்கண் பாலம் வழியாக கடக்க முடியாத நிலை தொடர்வதாக அப்பகுதி வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மாநகரில், மாலை நேர மழையால் சாலையோர வியாபாரிகள் சிரமம் அடைந்தனர். அதுபோல் பனியன் நிறுவனங்களில் பணியை முடித்து வீடு திரும்பியவர்களும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

மேலும் செய்திகள்