5 நாட்களில் 3,343 டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு- பெஸ்காம் நிர்வாக இயக்குனர் தகவல்
பெங்களூருவில் கடந்த 5 நாட்களில் 3,343 டிரான்ஸ் பார்மர்கள் பராமரிக்கப்பட்டிருப்பதாக பெஸ்கார் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரசோழன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு மின்சார வினியோக நிறுவன பெஸ்காம் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரசோழன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார், மக்கள் வசிக்கும் பகுதிகள், நடைபாதைகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் டிரான்ஸ்பார்மர்களை இடம் மாற்றுவது, பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து நாங்கள் கடந்த 5-ந் தேதி இந்த பணிகளை தொடங்கினோம். பெங்களூரு உள்பட எங்களது நிறுவன எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 5 நாட்களில் 3,343 டிரான்ஸ்பார்மர்களை பராமரித்துள்ளோம்.
இதில் பெங்களூருவில் 1,233 டிரான்ஸ்பார்மர்கள் பராமரிக்கப்பட்டுள்ளன. துமகூரு மாவட்டத்தில் 486, தாவணகெரேயில் 455, சித்ரதுர்காவில் 257 டிரான்ஸ்பார்மர்கள் பராமரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பராமரிப்பு பணிகள் 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய பராமரிப்பு பணிகள் மூலம் டிரான்ஸ்பார்மர்களில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது, மின்கசிவு காரணமாக தீ விபத்துகள் ஏற்படுவது குறையும். அத்துடன் எங்கள் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்புகளும் குறையும். வாடிக்கையாளர்களுக்கு தரமான மின்சாரம் வழங்க இத்தகைய பராமரிப்பு பணிகள் உதவுகின்றன.
இவ்வாறு ராஜேந்திரசோழன் கூறினார்.