பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு பல்லடம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாலுகா அலுவலகம் முற்றுகை
பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி துத்தாரிபாளையம் காலனி பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தினி சம்பத்குமார், கே.எஸ்.கே. பவுன்டேசன் நிறுவனர் சம்பத்குமார், மற்றும் விஸ்வநாதன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வீட்டுமனைப்பட்டா
கள்ளிப்பாளையம் ஊராட்சி துத்தாரிபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக அன்றைய ஊராட்சி மன்ற நிர்வாகம் வழங்கிய புறம்போக்கு நிலத்தில் மேடான பகுதியில் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த நிலையில் முன் அறிவிப்பு இன்றி நிலவருவாய் கள ஆய்வு செய்து அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சட்ட பிரிவை குறிப்பிட்டு ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை கேட்டுள்ளார். நாங்கள் அந்த இடத்தில் பல ஆண்டுகளாக வசித்துக்கொண்டு கூலி வேலைக்கு சென்று வருகிறோம்.
எங்களுக்கு அரசால் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வசிக்கும் இடத்தின் புல எண்ணை குடியிருப்பு பகுதியாக மாற்றி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.