பெங்களூருவில் 13-ந் தேதி மாநாடு - குமாரசாமி பேட்டி
ஜனதா ஜலதாரே ரத யாத்திரை நிறைவடைவதை முன்னிட்டு பெங்களூருவில் 13-ந் தேதி நடைபெறும் மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று குமாரசாமி கூறினார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
20 புரோகிதர்கள்
எங்கள் கட்சி சார்பில் ஜனதா ஜலதாரே ரத யாத்திரையை தொடங்கியுள்ளோம். இந்த யாத்திரை கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட்டது. 15 ரத வாகனங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகின்றன.
அந்தந்த பகுதியில் இருந்து நதிநீர் சேகரித்து கொண்டு வரப்படுகிறது. இந்த ஜலதாரே ரத யாத்திரையின் நிறைவு நாள் மாநாடு வருகிற 13-ந் தேதி நெலமங்களாவில் நடக்கிறது.
இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். பெங்களூரு நகர மக்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று கருதி மாநாட்டை நகருக்கு வெளியே ஏற்பாடு செய்துள்ளோம். மதத்தின் பெயரில் சிலர் கர்நாடகத்தில் அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இந்த மாநாட்டில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆரத்தி நிகழ்ச்சியை நடத்துவதற்காக வாரணாசியில் இருந்து 20 புரோகிதர்கள் கர்நாடகம் வருகிறார்கள்.
திட்டங்களுக்கு முக்கியத்துவம்
கர்நாடகத்தில் நீரை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்தில் இந்த கங்கா ஆரத்தி நடத்தப்படுகிறது. ஜனதா தளம்(எஸ்) சொந்த பலத்தில் ஆட்சி அமைத்தால் நீர்ப்பாசன திட்டங்கள் அமல்படுத்தப்படும். இதுகுறித்து மாநாட்டில் சபதம் ஏற்போம். கர்நாடகத்தின் இயற்கை வளங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.
எத்தினஒலே, மகதாயி நதிநீர் உள்ளிட்ட திட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. எங்கள் கட்சியின் ஆட்சி அமைந்தால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நதி நீர் ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்துவோம். குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதேநிலை தொடர்ந்தால் வரும் காலத்தில் பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை ஏற்படும். பெங்களூருவில் சில ஏரிகள் மற்றும் கால்வாய்களை ஆக்கிரமித்துவிட்டனர்.
உணவு ஏற்பாடு
நெலமங்களா மைதானத்தில் இருந்தே 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நாங்கள் தொடங்குகிறோம். மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.