பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த அரசு தயார்-பசவராஜ் பொம்மை
பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த அரசு தயார் என டெல்லியில் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
அரசு தயாராக உள்ளது
சுப்ரீம் கோர்ட்டு உள்ளாட்சி அமைப்பு தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறித்த காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தேர்தலை எக்காரணம் கொண்டும் ஒத்தி வைக்கக்கூடாது என்றும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோா்ட்டு ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை நான் முழுவதுமாக படிக்கவில்லை. இந்த உத்தரவு அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. பெங்களூரு மாநகராட்சி உள்பட உள்ளாட்சி தேர்தலை நடத்த எங்கள் அரசு தயாராக உள்ளது.
மண்டல கூட்டங்கள்
அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் மற்றும் அதன் சாதக-பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யும்படி அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளேன். கர்நாடக தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
தேர்தலை நடத்துவது அந்த ஆணையம் தான். பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராகியுள்ளோம். பெங்களூருவில் மண்டல வாரியாக கூட்டங்களை நடத்தி இருக்கிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.