டெல்லியில் மத்திய சுகாதார மந்திரியுடன் பசவராஜ் பொம்மை நேரில் சந்திப்பு
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்தித்து பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மேலிட தலைவர்களை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பெங்களூரு:
தொழில் தொடங்க சூழல்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டமிட்டப்படி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மத்திய நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உடன் இருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான் டெல்லி வந்துள்ளேன். இன்று(நேற்று) மாலையில் பல்வேறு நாடுகளில் தூதர்களை நேரில் சந்தித்து கர்நாடகத்தில் தொழில் தொடங்க உகந்த சூழல் இருப்பதாக அவர்களிடம் எடுத்துக்கூற இருக்கிறேன். தொழில்துறையினர் கேட்டுக் கொண்டதால் நான் டெல்லி வந்துள்ளேன்.
பெங்களூரு திரும்புகிறேன்
எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அவர்கள் தற்போது டெல்லியில் இல்லை. அதனால் அவர்களை சந்திக்கவில்லை. முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு பெங்களூரு திரும்புகிறேன்.
இன்று மந்திரிசபை கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது.
காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல், மந்திரி அஸ்வத் நாராயணனை சந்தித்து இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள்.
இதுபோன்ற சந்திப்புகள் நடப்பது இயல்பு தான். நான் பெங்களூரு திரும்பியதும் இதுபற்றி அஸ்வத் நாராயணிடம் பேசுவேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம்
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாட்களுக்குள் மந்திரிசபை மாற்றம் நிகழும் என்று கடந்த 6-ந் தேதி கூறினார். அதனால் பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்கள், மந்திரி பதவி கனவில் மிதந்தனர். ஆனால் டெல்லியில் மேலிட தலைவர்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்திக்காததால் மந்திரிசபை மாற்றம் இந்த வாரம் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.