தடை செய்த 75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் தடை செய்த 75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகரில் உள்ள கடைகள், உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக நகராட்சி அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதைதொடர்ந்து ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், செந்தில்குமார், மணிகண்டன், ஆறுமுகம் ஆகியோர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்நிலை திடல், கடை வீதி, சத்திரம் வீதி, காந்தி மண்டபம் சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 75 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து விற்பனை செய்தால் கடை பூட்டி சீல் வைக்கப்படும். உணவகங்களில் உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்து கொடுக்க கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.