குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி மேயரிடம் பொதுமக்கள் மனு

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி குறை தீர்க்கும் கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.;

Update: 2022-05-10 16:37 GMT
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ மாநகர பொறியாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உதவி ஆணையாளர்கள் அய்யப்பன், லெனின், ஜஹாங்கிர் பாட்சா, உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, பைஜு, ராமசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை சீனிவாசநகர், தென்றல்நகர், சரண்யாநகர், ஆதித்தனார் நகர் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மேயரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘பாளையங்கோட்டை சீனிவாசநகரில் புறநகர் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். இந்த பகுதியில் தற்போது 4 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே 2 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாசநகர் பிரதான சாலையின் இரு புறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை உடனே அகற்ற வேண்டும். தென்றல் நகரில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். சீனிவாசநகர் குறுக்குச்சாலையில் மின்விளக்கு பொருத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

பேட்டை வாகைகுளம் அண்ணாமலை நகர் விரிவாக்க குடியிருப்போர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், ‘பேட்டை வாகைகுளம் அண்ணாமலை நகர் விரிவாக்க பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் சரியான அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை. எனவே அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் மாநகராட்சி லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் மேலும் பூங்கா அமைவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

பா.ஜனதாவினர் கொக்கிரகுளம் நிர்வாகி பாலகங்காதர திலகர் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர் அந்த மனுவில், ‘கொக்கிரகுளம் ஊர்மக்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறைந்த நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. இதுதொடர்பாக பஸ் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், ‘நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் நான்கு ரத வீதிகளில் தற்போது நடைபாதை வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். அந்த இடத்திலேயே தொடர்ந்து கடை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.  நெல்லை டவுன் ஆதம்நகர் பகுதியில் சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்