பாபாபுடன்கிரி மலையில் சரக்கு வேன் கவிழ்ந்தது; சுற்றுலா பயணிகள் 20 பேர் காயம்
சிக்கமகளூரு அருகே பாபாபுடன்கிரி மலையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர்
சிக்கமகளூரு: சிக்கமகளூரு அருகே பாபாபுடன்கிரி மலையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர்.
சரக்கு வேன்
சிக்கமகளூரு மாவட்டம் பாபாபுடன் கிரி மலைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வந்து செல்கிறார்கள். தற்போது அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மிதமான சீதோஷ்ண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில்
ஒரு சரக்கு வேனில் 50-க்கும் மேற்பட்டோர் பாபாபுடன் கிரி மலைக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்கள் வடமாநிலத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பாபாபுடன் கிரி மலையை சுற்றிப்பார்த்த அவர்கள் அங்கிருந்து மலைப்பாதை வழியாக மாணிக்கதாரா அருவிக்கு சென்று கொண்டிருந்தனர்.
20 பேர் காயம்
அப்போது மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவு பகுதியில் மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக சரக்கு வேன் டிரைவர் வாகனத்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், தாறுமாறாக ஓடி பள்ளத்தில் உருண்டு விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனில் பயணித்து வந்த 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தைப் பார்த்த அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.