பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் முற்றுகை
பாளையங்கோட்டையில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் முற்றுகைத்தை சமூகநீதி சமூகங்களின் கூட்டு இயக்கத்தினர் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
தூய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தலித் பணியாளர்களுக்கு உரிய காலத்தில் பணி உயர்வு வழங்க வேண்டும். தலித் தூய்மை பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். மாதந்தோறும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும். தீண்டாமையை கடைப்பிடிக்கும் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தை சமூகநீதி சமூகங்களின் கூட்டு இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துவளவன் தலைமை தாங்கினார். திராவிடர் தமிழர் கட்சி மாநில செயலாளர் கதிரவன் போராட்டத்தை விளக்கி பேசினார். இதில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, நிதிச்செயலாளர் தமிழ்மணி, நாங்குநேரி தொகுதி செயலாளர் காளிதாஸ், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன், திராவிடர் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் திருக்குமரன், கரும்புலிகுயிலி பேரவைச் செயலாளர் தச்சை மாடத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.