கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் நேற்று 2வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் நேற்று 2வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்
கோவை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் நேற்று 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து கோத்தகிரி போலீசார் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் விசாரணை
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு தனிப்படையினர் சம்மன் அனுப்பி, அவர்களை
கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்படி ஏற்கனவே கைதான சயான், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றன், பங்காள மரவேளைபாடுகளை செய்த பர்னிச்சர் கடை உரிமையாளர் அ.தி.மு.க. நிர்வாகி சஜீவன்,
அவருடைய சகோதரர் சுனில் உள்பட ஏராளமானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சயானிடம் 2-வது நாளாக...
இந்த நிலையில் நேற்று முன்தினம் சயானிடம் 5 மணி நேரம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று சயானிடம் தொடர்ந்து 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதற்காக அவர் நேற்று காலை 11 மணி அளவில் கோவை பி.ஆர்.எஸ்.மைதானத்துக்கு வந்தார்.
அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது இரவு 7 மணி வரை சுமார் 8 மணி நேரம் நடந்தது.