தண்ணீர் லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்
கன்னிவாடி அருகே தண்ணீர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
கன்னிவாடி :
கன்னிவாடி நாய் ஓடை அணையிலிருந்து உபரிநீர் வாய்க்கால் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த தண்ணீர் தெத்துப்பட்டி குளம், சிறுநாயக்கன்பட்டி குளம், கொட்டாரபட்டி குளம், ரெட்டியார்சத்திரம் குளம் வழியாக வாடிப்பட்டி குளத்துக்கு செல்கிறது. பின்னர் அங்கு இருந்து குடகனாற்றில் சென்று சேருகிறது. இந்த வாய்க்காலில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி லாரிகள் மூலம் 4 வழிச்சாலை பணிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் கன்னிவாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குளங்கள், பாசன கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கன்னிவாடி அருகே உள்ள சோமலிங்கபுரம் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் தனியார் நிறுவன தண்ணீர் லாரிகளை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த தனியார் நிறுவன அதிகாரி ராஜசேகரும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இனி அந்த வாய்க்காலில் இருந்து தண்ணீர் எடுப்பதில்லை என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.