கிரிவலப்பாதையின் அருகாமையில் தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்க கோரிக்கை
கடந்த சித்ரா பவுர்ணமி போன்று இல்லாமல் இனி வரும் பவுர்ணமி நாட்களில் கிரிவலப்பாதையின் அருகாமையில் தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை
கடந்த சித்ரா பவுர்ணமி போன்று இல்லாமல் இனி வரும் பவுர்ணமி நாட்களில் கிரிவலப்பாதையின் அருகாமையில் தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள பக்தர்களால் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி மாதந்தோறும் பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று வருகின்றனர்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் சுமார் 12.15 மணியளவில் தொடங்கி மறுநாள் (திங்கள்கிழமை) காலை 10.20 வரை உள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்றுவைகாசி மாத பிறப்பன்று வர உள்ளதால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்காலிக பஸ் நிலையம்
வழக்கமாக பவுர்ணமி நாட்களில் ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில், மார்க்கெட் கமிட்டி உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமையும். ஆனால் கடந்த மாதம் நடந்து முடிந்த சித்ரா பவுர்ணமியின் போது தற்காலிக பஸ் நிலையங்கள் கிரிவலப்பாதையில் இருந்து சுமார் 2-ல் இருந்து 3 கிலோ மீட்டர் வரை தொலைவில் அமைக்கப்பட்டு இருந்தது. அதனால் கிரிவலம் சென்ற பக்தர்கள் தற்காலிக பஸ் நிலையங்களுக்கு மீண்டும் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்தனர்.
எனவே வரும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரை சுற்றி அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையங்கள் கிரிவலப்பாதையின் அருகாமையில் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பவுர்ணமி கிரிவலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மூலம் கிரிவலப்பாதையில் தண்ணீர் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகிறது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். ஆம்புலன்சு போன்றவை வந்தால் வழி விடுவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.