பென்னேரி, மீஞ்சூரில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை
பொன்னேரி மற்றும் மீஞ்சூரில் 2 ரவுடிகள் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவுடி கொலை
பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் வசித்து வந்தவர் ஜவகர் (வயது 31). ரவுடியான இவருக்கு சினேகா (25) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் மீது கொலை, கஞ்சா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் கஞ்சா மற்றும் அனுமதி இல்லாத நாட்டு துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் தனது உறவினர் சிகன் என்பவருடன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜி மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் சுற்றி வளைத்து அரிவாளால் 2 பேரையும் வெட்டி சாய்த்தனர்.
இதில் ஜவகர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். சிகனுக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
5 பேர் சரண்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மற்றும் துணை-போலீஸ் சூப்பிரண்டு சாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலை சம்பந்தமாக பள்ளம் பகுதியை சேர்ந்த விஜி (38), மொட்டை கார்த்திக் (22), ஆட்சி என்கிற ராஜவேலு (25), வசந்த் (23), சூர்யா (29) ஆகிய 5 பேர் பொன்னேரி போலீ்ஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் மீஞ்சூர் அருகே உள்ள வாயலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் மூர்த்தி ( 55). ரவுடியான இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இவர் மீது 3 கொலை வழக்கு உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் திருவெள்ளைவாயல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அரசு அனுமதியின்றி பார் நடத்தி வந்தார். பார் நடத்துவது தொடர்பாக மூர்த்திக்கும் மற்ற தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை 7 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பாரின் உள்ளே நுழைந்து மூர்த்தியை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவலறிந்து காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.