ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்
பட்டிவீரன்பட்டி அருகே ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் முகாம் நடந்தது.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள ஒட்டுப்பட்டி கிராமத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை தாங்கி பேசினார். ஆத்தூர் தாசில்தார் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஆத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா வரவேற்றார். இம்முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர். மேலும் கிசான் திட்டத்தின் ஊக்கத் தொகை, கிசான் கடன் அட்டை, குளங்களில் வண்டல் மண் எடுக்க, கால்நடை செயற்கை கருவூட்டல், பட்டா மாறுதல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் குஜிலியம்பாறை அருகே தி.கூடலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகம்) ராஜா தலைமை தாங்கினார். குஜிலியம்பாறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கீதா முன்னிலை வகித்தார்.
இந்த ஒருங்கிணைந்த முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட 12 அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு துறைசார்ந்த திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். முடிவில் தி.கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கோபால் நன்றி கூறினார். இதேபோன்று ஆர்.புதுக்கோட்டை, வடுகம்பாடி, மல்லபுரம், ஆர்.கோம்பை, ஆலம்பாடி ஆகிய ஊராட்சிகளிலும் முகாம் நடைபெற்றது.