தடுப்புச்சுவரில் லாரி மோதி கவிழ்ந்து விபத்து

தடுப்புச்சுவரில் லாரி மோதி கவிழ்ந்து விபத்து;

Update: 2022-05-10 14:09 GMT
முத்தூர்- கொடுமுடி சாலை குப்பயண்ணசாமி கோவில் பஸ் நிறுத்தம் அருகில் தடுப்புச்சுவரில் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தடுப்புச்சுவரில் மோதிய லாரி
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டு வந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 37) என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.
இந்த லாரி திருப்பூர் மாவட்டம் முத்தூர் - கொடுமுடி பிரதான சாலையில் குப்பயண்ணசாமி கோவில் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென்று எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலைத்துறை மூலம் விபத்துக்களை தடுப்பதற்காகவும், கனரக, இருசக்கர வாகனங்கள் மிதமான வேகத்தில் ஒரு வழிப்பாதையில் செல்வதற்காகவும் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் வேகமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரி உதிரி பாகங்கள் சேதம்
இந்த லாரி தடுப்புச்சுவரில் மோதிய வேகத்தில் லாரியின் முன்புற 2 சக்கர கண்களும் தனியாக கழன்று விழுந்தது. மேலும் லாரியின் அடியில் உள்ள எஞ்சின் மற்றும் இரும்பு உதிரி பாகங்கள் அனைத்தும் உடைந்து பலத்த சேதமடைந்து கழன்று விழுந்தன. மேலும் லாரியின் முன்புற இடது பக்கத்தில் இருந்த டீசல் டேங்க் உடைந்து டீசல்கள் சாலையில் ஆறாக ஓடியது. ஆனாலும் தார்ச்சாலையில் லாரி மோதிய வேகத்தில் உராய்வினால் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் நல்லவேளையாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் கனகராஜ் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். 

மேலும் செய்திகள்