தூத்துக்குடி மாவட்டத்தில் 88 மையங்களில் பிளஸ் 1 தேர்வு தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் 88 மையங்களில் பிளஸ்-1 தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தேர்வை மையங்களை கல்வி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2022-05-10 12:54 GMT
தூத்துக்குடி:
 தூத்துக்குடி மாவட்டத்தில் 88 மையங்களில் பிளஸ்-1 தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தேர்வை மையங்களை கல்வி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகின்ன. இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வுகள் நேற்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 88 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வை 204 பள்ளிகளில் படிக்கும் 9 ஆயிரத்து 863 மாணவர்கள், 11 ஆயிரத்து 158 மாணவிகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 21 பேர் எழுதினர்.
தேர்வுக்கான வினாத்தாள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் கட்டு காப்பகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. நேற்று காலையில் வினாத்தாள் கட்டுகளை 22 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
பறக்கும் படை
நேற்று காலையில் மொழிப்பாடம் தேர்வு நடந்தது. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர். பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளி வளாகத்துக்குள் வெளியாட்கள் யாரும் நுழையாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தேர்வை கண்காணிக்க 155 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 88 பேர் துறை அலுவலர்களாகவும், 88 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், 1,300 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஆய்வு
தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையம் மற்றும் பல்வேறு தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்