தூத்துக்குடியில் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
தூத்துக்குடியில் ஒரு கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஒரு கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர். மற்றொரு கடையில் எந்த பொருளும் திருட்டு போகவில்லை.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பலசரக்கு கடை
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 50). இவர் சுப்பையாபுரம் மெயின் ரோட்டில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலையில் மீண்டும் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் கடையின் உள்ளே சென்று பார்த்தாராம். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.18 ஆயிரம் மற்றும் செல்போனை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணை
இதேபோன்று தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பெட்டிக்கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த கடையில் எந்தவித பொருட்களும் திருடப்படவில்லை. இதுகுறித்தும் தென்பாகம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகார்களின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்தார். இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அதேபோன்று அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒரே நாளில் 2 கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.