சாகு மகாராஜா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விதவை சடங்கு தடை- தீர்மானம் நிறைவேற்றம்

சாகு மகாராஜாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மராட்டிய கிராம பஞ்சாயத்தில் விதவை சடங்குகளை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2022-05-10 11:36 GMT
விதவை சடங்கு தடை தீர்மானம் நிறைவேற்றம்
புனே, 
  சாகு மகாராஜாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மராட்டிய கிராம பஞ்சாயத்தில் விதவை சடங்குகளை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
விதவை சடங்கு 
  உற்றத்துணையாக வாழ்ந்த கணவரை இழந்த துக்க சம்பவத்தின் சோக சுவடுகள் ஆறுவதற்குள் மேற்கொள்ளப்படும் விதவை சடங்குகள், பெண்களுக்கு மேலும் சோகத்தையும், வாழ்க்கையில் வெறுமையையும் ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து விடுகிறது. கணவரை இழந்த பெண்களின் வளையல்களை உடைப்பது, நெற்றியில் குங்குமத்தை அழிப்பது, தாலியை அகற்றுவது போன்றவற்றை சடங்காக செய்வது பெண்களுக்கு வலியூட்டக்கூடியதாக இருக்கிறது. 
தீர்மானம் நிறைவேற்றம்
  இந்நிலையில், கோலாப்பூர் மாவட்ட ஷிரோல் தாலுகாவில் உள்ள அர்வாட் என்ற கிராம பஞ்சாயத்து, சமூக சீர்திருத்த எண்ணம் கொண்ட சாகு மகாராஜாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பிற்போக்கு தன்மை கொண்ட இந்த விதவை சடங்குகளை, தடை செய்ய மக்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. 
 மகாத்மா புலே சமாஜ் சேவா மண்டலத்தின் நிறுவன தலைவர் பிரமோத் ஜிஞ்சாடே, இந்த தீர்மானத்தை கிராம பஞ்சாயத்தில் நிறைவேற்ற ஊக்குவித்தவர் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், சாகு மகாராஜாவின் 100-வது ஆண்டு நினைவு தினத்தில், இத்தகைய தீர்மானத்தை ஒரு கிராமம் நிறைவேற்றியதை எண்ணி பெருமைப்படுகிறேன் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்