வீரசக்தி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 63 டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் செந்தில்ராஜ்
வீரசக்தி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 63 டாஸ்மாக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியன் கட்டபொம்மன் கோட்டையில் வீரசக்கதேவி ஆலய உற்சவ விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மற்றும் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் தாலுகா எட்டயபுரம், முத்தலாபுரம், கோவில்பட்டி தாலுகா கோவில்பட்டி, கழுகுமலை, அய்யநேரி, இளையரசநேந்தல், பாண்டவர்மங்கலம், இலுப்பையூரணி, கயத்தாறு தாலுகா கயத்தாறு, தீத்தாம்பட்டி, நாவலக்கம்பட்டி, செட்டிக்குறிச்சி, ஆசூர் தளவாய்புரம், அய்யனாரூத்து, சுப்பிரமணியபுரம், வடக்கு இலந்தைகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகா ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், தருவைகுளம், பரிவில்லிகோட்டை, பசுவந்தனை, முப்பிலிவெட்டி, குறுக்குச்சாலை, கொடியன்குளம், விளாத்திகுளம் தாலுகா சித்தவிநாயம்பட்டி, நேதாஜிநகர், குளத்தூர், சூரங்குடி, சிப்பிகுளம் ரோடு, சிவனாபுரம், புதூர், காடல்குடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்து உள்ள 63 டாஸ்மாக் கடைகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மட்டும் மூடப்படுகிறது.
இந்த டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்களும் பொதுமக்கள் நலன் கருதியும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது. எனவே அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.