பட்டாவிற்குரிய இடத்தை அளந்து காட்டக்கோரி மனு
பட்டாவிற்குரிய இடத்தை அளந்து காட்டக்கோரி மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா, பாடாலூரை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாடாலூர் செக்கடி மேட்டுத்தெரு வழியாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே கோவில் திருவிழாக்களுக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சாலை வழியாக கோவில் திருவிழாக்களுக்கு சென்று வர அறிவுறுத்த வேண்டும். மேலும் இரு சமூகத்திற்கு இடையே மோதலை தூண்டிவிடும் விதமாக பாடாலூர் ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான இடத்தில் அந்த சமூகத்தினர் அனுமதி பெறாமல் புதிதாக சாமி சிலையை வைத்துள்ளனர். அந்த இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க இருப்பதால், அந்த சிலையை வேறொரு இடத்துக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
குன்னம் தாலுகா, நமையூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 51 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறையினரால் கடந்த 2008-ம் ஆண்டு காலனி வீடு கட்டிக்கொள்ள பட்டா வழங்கினர். ஆனால் இதுவரை அந்த பட்டாவிற்கு உரிய இடத்தை அளந்து காட்டவில்லை. எனவே பட்டாவிற்கு உரிய நிலத்தை அளந்து காட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கட்டப்பஞ்சாயத்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாடாலூர் கிளை செயலாளர் பாஸ்கர் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடாலூரில் பஸ் நிறுத்தத்துக்கு இருக்கையுடன் கூடிய பயணிகள் நிழற்குடை, குடிநீர் வசதி, இலவச கழிவறை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வேப்பந்தட்டை தாலுகா, கொட்டாரக்குன்று கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து பேசி, அபராத தொகை விதித்து, அதனை கட்ட மறுப்பவர்களை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
தொடர் திருட்டு
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது இக்பால் கொடுத்த மனுவில், பெரம்பலூர் நகரில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் சித்திக் பாஷா கொடுத்த மனுவில், வேப்பந்தட்டை தாலுகா, கல்லாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 239 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, அந்த மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் அவர் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.03 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.