கோபி அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 58 பவுன் நகை-பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கோபி அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 58 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-05-09 22:33 GMT
கடத்தூர்
கோபி அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 58 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
பூட்டு உடைப்பு
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் மலர் நகரை சேர்ந்தவர் டேவிட் சூசை மாணிக்கம் (வயது 63). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி இசபெல்லா ஜான்சிராணி (60). ஓய்வுபெற்ற தலைமை
ஆசிரியை.
கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கணவன், மனைவி இருவரும் சென்று விட்டார்கள். 
இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே டேவிட் சூசை மாணிக்கத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுபற்றி கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும் வீட்டுக்கு மனைவியுடன் விரைந்து வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தன. 
58 பவுன் நகை
மேலும் பீரோவில் வைத்திருந்த 58 பவுன் நகைகளையும் ரூ.30 ஆயிரத்தையும் காணவில்லை. இதற்கிடையே புகாரின் பேரில் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் வீட்டின் முன்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவையும் உடைத்து அதில் இருந்த நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. 
இதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து  மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை சம்பவம் நடைபெற்ற அறையில் இருந்து சிறிது தூரம் வெளியே ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. 
வலைவீச்சு
இதேபோல் கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். 
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
மேலும் சம்பவம் நடந்த வீட்டின் முன்புறம் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் போலீசாருடன் சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டார்.
இந்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்