சேலத்தில் குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது

சேலத்தில் குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-05-09 22:21 GMT
சேலம்,
சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 28). பிரபல ரவுடியான இவர், கடந்த 2017-ம் ஆண்டு தனது கூட்டாளிகளுடன் பெருமாம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி ரூ.12 லட்சத்தை பறித்து சென்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரிசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்து 2019-ம் ஆண்டில் பனங்காடு பகுதியில் ஓட்டலில் வேலை செய்த ஜெகதீசன் மற்றும் அவரது தம்பி ஞானசேகர் ஆகியோரை கொடுவாளால் வெட்டி தாக்கினார்.
தொடர்ந்து ரவுடி கவுரி சங்கர் 2020-ம் ஆண்டில் பெரியபுத்தூரில் மகாலிங்கம் என்பவரை தாக்கியதாகவும், கடந்த மாதம் இரும்பாலை காமராஜர் நகரை சேர்ந்த ராஜா என்பவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 ஆயிரத்து 100-ஐ பறித்தும் சென்றுள்ளார். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி மற்றும் இரும்பாலை போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து ரவுடியை கைது செய்தனர்.
இந்தநிலையில், ரவுடி கவுரிசங்கர் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து வருவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு இரும்பாலை போலீசார், மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து ரவுடி கவுரிசங்கரை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்