விபத்தில் தந்தை, மகன் படுகாயம்
சிவகிரியில் நடந்த விபத்தில் தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர்.
சிவகிரி:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சிவகிரி அருகே உள்ளார்-தளவாய்புரத்துக்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி வந்து கொண்டிருந்தது. கடையநல்லூர் தாலுகா கரடிகுளத்தைச் சேர்ந்த கடல் மகன் தங்கப்பாண்டி (வயது 31) என்பவர் மினி லாரியை ஓட்டி வந்தார். அப்போது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு- புதுப்பட்டி ஆர்.சி. தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் இன்பத்தமிழன் (25) என்பவர் தன் மகன் கார்த்தியுடன் (3) மோட்டார் சைக்கிளில் சென்றார் .
சிவகிரி பழைய போலீஸ் நிலையம் அருகே உள்ள திருப்பத்தில் மினி லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் இன்பத்தமிழனும், அவரது மகன் கார்த்திக்கும் தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் சிறுவனின் கால் முறிந்தது. அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக ராஜபாளையம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.