கனமழையால் விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து விழுந்தது

பெங்களூருவில், முதல்-மந்திரியால் 8 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-05-09 21:52 GMT
பெங்களூரு:

விளையாட்டு மைதானம்

  பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் புதிதாக விளையாட்டு மைதானம் ரூ.40¼ கோடி செலவில் கட்டப்பட்டு இருந்தது. இந்த மைதானத்தின் திறப்பு விழா கடந்த 1-ந் தேதி நடந்தது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு புதிய மைதானத்தை தொடங்கி வைத்து இருந்தார்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் கனமழை பெய்தது. அப்போது புதிதாக திறக்கப்பட்ட மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது மைதானத்தின் முன்பு நின்றுகொண்டு இருந்த ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு உயிர்சேதம் எதுவும் எற்படவில்லை. இதுபற்றி அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று இடிந்து விழுந்த மேற்கூரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு

  இந்த நிலையில் ரூ.40¼ கோடி செலவில் கட்டப்பட்ட விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து விழுந்து இருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பணிகள் தரமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும், முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறியுள்ள காங்கிரஸ், சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

  சம்பவம் குறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் கூறும்போது, மைதானத்தின் உள்கட்டமைப்பு காற்று, மழையை தாங்கும் விதத்தில் இருக்க வேண்டும். இந்த விளையாட்டு மைதானத்தை கட்டிய ஒப்பந்ததாரரிடம் சம்பவம் குறித்து விளக்கம் கேட்கப்படும். மேலும் அவரது சொந்த செலவில் மைதானத்தை புனரமைக்க வேண்டும் என்றும் கேட்போம் என்றார்.

மேலும் செய்திகள்