மருந்தக உரிமையாளர் கொலைக்கு நீதி கேட்டு பா.ம.க. ஆர்ப்பாட்டம்
மருந்தக உரிமையாளர் கொலைக்கு நீதி கேட்டு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருந்தக உரிமையாளரான நாகராஜனை மாமூல் தர மறுத்ததால் அடித்துக்கொலை செய்த வழக்கில் 4 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி உள்ள ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் மருந்தக உரிமையாளர் நாகராஜன் கொலைக்கு நீதி கேட்டு பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் தனிவீடு காடுவெட்டி ரவி, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன், மாவட்ட தலைவர்கள் மருதவேல் (பெரம்பலூர்), சின்னதுரை (அரியலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் தலைவர் பாலு கலந்து கொண்டு, மருந்தக உரிமையாளர் நாகராஜன் கொலைக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க.வினர், நாகராஜன் கொலை வழக்கில் உண்மையான 2 குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும். மாமூல் கேட்கும் ரவடிகளை கைது செய்ய வேண்டும். லாடபுரம் கிராமத்தில் சட்ட விரோத மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட நாகராஜன் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.