திசையன்விளையில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆசிரியர் கண்டித்ததால் விபரீத முடிவு

திசையன்விளையில் ஆசிரியர் கண்டித்ததால் பள்ளிக்கு செல்ல மறுத்த 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-09 20:34 GMT
திசையன்விளை:
9-ம் வகுப்பு மாணவி
நெல்லை மாவட்டம் திசையன்விளை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் ரம்யா (வயது 14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கூடத்தில் நடந்த ஆண்டு இறுதித்தேர்வை ரம்யா எழுதினார். அப்போது அவரை சக மாணவ-மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ரம்யா மாலையில் வீட்டுக்கு சென்ற பின்னர், இனி பள்ளிக்கூடத்துக்கு செல்ல மாட்டேன் என்று பெற்றோரிடம் கூறினார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தினர்.
தற்கொலை
இந்த நிலையில் இரவில் ரம்யா தனது வீட்டில் மின்விசிறியில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்