நெல்லை அருகே பரபரப்பு பாழடைந்த வீட்டில் மர்மபொருள் வெடித்ததில் பெண் படுகாயம் போலீசார் விசாரணை

நெல்லை அருகே பாழடைந்த வீட்டில் மர்மபொருள் வெடித்ததில் பெண் படுகாயமடைந்தார்.

Update: 2022-05-09 20:19 GMT
பேட்டை:
பாழடைந்த வீட்டில் ஆற்றுமணல்
நெல்லை அருகே சுத்தமல்லி கோவில்பத்து தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 34). இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
இவரது மாமியார் சுப்புலட்சுமிக்கு சொந்தமான வீடு, அப்பகுதியில் பயன்பாடற்று பாழடைந்த நிலையில் உள்ளது. அங்கு ஆற்று மணல் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.
மர்மபொருள் வெடித்து சிதறியது
நேற்று மாலையில் மீனாட்சி வீட்டு கட்டுமான பணிக்காக, மாமியார் வீட்டில் குவித்து வைக்கப்பட்டு இருந்த ஆற்று மணலை எடுக்க சென்றார்.
அப்போது அவர், ஆற்று மணலில் மண்வெட்டியால் வெட்டியபோது, அதற்குள் இருந்த மர்மபொருள் திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மீனாட்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசார் விசாரணை
உடனே சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பாழடைந்த வீட்டில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்று சோதனை நடத்தினர்.
விழாக்காலங்களில் வாணவேடிக்கை நிகழ்த்த பயன்படுத்திய வெடிப்பொருட்களில் மீதியானவற்றை ஆற்று மணலுக்குள் பதுக்கி வைத்திருக்கலாம். அவற்றை மண்வெட்டியால் வெட்டியதில் வெடித்து சிதறி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்