தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பும் நிவாரண பொருட்கள் தமிழீழ மக்களுக்கு சென்றடைய வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பும் நிவாரண பொருட்கள் அனைத்தும் தமிழீழ மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ் அமைப்பினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-05-09 20:13 GMT
நெல்லை:
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தியாகராஜன், தாட்கோ மேலாளர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் தேசிய தன்னுரிமை கட்சித்தலைவர் வியனரசு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு பீட்டர், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், பொதுச் செயலாளர் பாலமுருகன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென்மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட செயலாளர் ஜமால் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 
தமிழீழ மக்களுக்கு...
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறிஇருப்பதாவது:-
சிங்கள அரசின் இனவெறி தாக்குதலாலும், அங்குள்ள தமிழீழ மக்கள் மீது திணித்த போராலும் இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இனப்படுகொலை போர் குற்றவாளி என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ராஜபக்சே ஐ.நா. மனித உரிமையின் விசாரணையில் உள்ளார். பொருளாதார நெருக்கடியால் துயரப்படும் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு ரூ.123 கோடி மதிப்புள்ள அரிசி, பால் மாவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப தீர்மானித்துள்ளது. இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் தமிழீழ மக்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும்.
அதற்காக ஈழத்தமிழர்களின் தலைவர்களான வடக்கு மாகாண முன்னாள் முதல்-அமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் எம்.பி.க்களைக் கொண்ட குழு அமைத்து அக்குழுவிடம் உதவிகளை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென் மாவட்ட சிவனடியார்கள் கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் திருநீறு அணிந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், இந்து மத கடவுள்களான நடராஜ பெருமான், தில்லைக்காளி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் ஒரு யூடியூப் சேனலில் ஒரு காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. இது இளைய தலைமுறையின் மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்தும். எனவே அந்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பல்லக்கு தூக்கி வந்தனர்
இந்து தேசிய கட்சி தலைவர் எஸ்.எஸ்.எஸ்.மணி தலைமையில் மாவட்ட தலைவர் சங்கர் மற்றும் கட்சியினர் பட்டினப்பிரவேசம் போல் ஒரு சாமியாரை பல்லக்கில் வைத்து தூக்கி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேசம் செல்வதற்கு தடை விதித்தது பெரும்பான்மை மக்களின் மனதை    புண்படுத்தி உள்ளது. காலங்காலமாக நடைபெற்று வரும் மரபு. இது குருவிற்கு சிஷ்யர்கள் பல்லக்கு தூக்கி செல்வது நன்றி கடனாகும். பல போராட்டங்களுக்கு பின்னர் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் இனிவரும் காலங்களில் அரசு ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளனர்.
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி பாளையங்கோட்டை டாக்டர் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த முத்துக்குமார் மனு கொடுத்தார்.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில், ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 42 பேருக்கும், ரூ.36 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் காணி பழங்குடி இன மக்கள் 15 பேருக்கு கடன் உதவிகளையும், கலைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கப்பரிசையும் கலெக்டர் விஷ்ணு நேற்று வழங்கினார்.

மேலும் செய்திகள்